ஞாயிறு, 22 நவம்பர், 2015

பிரம்மிக்க வைத்த தீப்பிழம்பு

அத்திரி மகரிஷியும்,அனுசுயாவும் சதுரகிரிக்கு புறப்பட்டுச் சென்ற சிறிதுநேரத்தில்,எதிர்பாராத விதமாக அங்கு வந்தனர்.
அருணாச்சலேஸ்வரரும்,உண்ணாமுலை அம்மனும் !

அவர்களை பாத்த மாத்திரத்தில் பரவசம் ஆனார் அகத்தியர்.அப்போது அருணாச்சலேஸ்வரர் சற்று கோபமாக காணப்பட்டார்.

“என்ன அகத்தியரே....எல்லா சட்டத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டதுபோல் தெரிகிறதே....” என்றார் அருணாச்சலேஸ்வரர் சற்று கிண்டலாக !

“அப்படியொன்றும் இல்லை முக்கண்ணா ! “

“அப்படியென்றால் அத்திரி மகரிஷியின் தவத்தை நிறுத்தி,அவர் விரும்பியபடி அனுசுயாவை வரவழைத்து அவர்கள் இருவரையும் கணவன் – மனைவியாக மாற்றி சதுரகிரிக்கு அனுப்பி வைத்திருக்கிறீரே..இது என்ன நியாயம் அகத்தியா?”

“ஐயனே ! தங்களுக்கு சிரமம் கொடுக்கக்கூடாது என்பதற்காக தங்கள் பொறுப்பை அடியேன் ஏற்றுக்கொண்டேன்.எப்படி இருந்தாலும் அத்திரி ஒரு அற்புதமான சித்தன்.ஆலமரத்து விழுதில் அவன் தலைகிழாகத் தொங்கி தவம் செய்தபோது,அந்த ஆழம்விழுதை வெட்டி தாங்கள் சோதனை செய்தீர்கள்.அதையும் அவன்,தன் தவ வலிமை கொண்டு வென்றான் அல்லவா?

“ஆமாம் ! “

“அப்படிப்பட்டவனை மேலும் எதற்குச் சோதனை செய்ய வேண்டும்? என்றுதான் முடிவெடுத்தேன். அத்திரி மகரிஷிக்கும் -  அனுசுயாதேவிக்கும் பிறக்கின்ற வாரிசு பற்றி தங்களுக்கு நன்றாகவேத் தெரியும்.அதனால்தான் அத்திரி மகரிஷிக்கு உதவி செய்தேன்.அது தவறாக இருந்தால் அகத்தியனை மன்னித்து விடுங்கள் அய்யனே..” என்று அகத்தியர் சொன்னபிறகு அருணாச்சலேஸ்வரர் அமைதியானார்.

சில நொடிகள் கழிந்தது.

“அருணாச்சலேஸ்வரா..” அகத்தியரே தொடர்ந்தார்.

“ம்ம்”

“இங்கே எராளமான சித்தர்கள் கூடி இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் தங்களுடைய சித்தத் திறமையை தங்கள் முன் காட்ட வேண்டும் என்று வெகுகாலமாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.அதுவும் அண்ணாமலைக் காட்டில் தங்கள் மற்றும் தேவி உண்ணாமுலையம்மன் முன்னிலையில் வெளிப்படுத்தி,தங்கள இருவரது ஆசிர்வாதத்தையும் பெற விரும்புகிறார்கள்....”

“மிக்க மகிழ்ச்சி !”

“தாங்கள் அனுமதி கொடுத்தால் இங்குள்ள நந்தவனத்திலோ அல்லது மலை உச்சியிலோ   அவர்கள் தங்கள் சித்தத் தன்மைகளைக் காட்டுவார்கள்.தங்களது உத்தரவுக்காக காத்திருக்கிறோம்...”

“எத்தனை சித்தர்கள் இங்கு உள்ளனர் ?”

“2௦5 பேர்”

“இவர்கள் எல்லோரும் ஒரே சித்து வேலையைத்தானே காட்டப் போகிறார்கள்?”

“இல்லை முக்கண்ணா..இந்த 2௦5 சித்தர்களும் தங்கள் கருணையால் பல்வேறு அற்புதங்கள் செய்யக்கூடியவர்கள் .ஒவ்வொருச் சித்தரும் ஒவ்வொரு வகையில் கொடிகட்டிப் பறப்பவர்கள்...”

“எல்லோரையும் நான் காண இயலாது.அவர்களின் மிகவும் திறமை பெற்ற சித்தர்களை மட்டும் அழைத்து வா ...”

“சித்தர்களுக்கு எல்லாம் தலைமைச் சித்தராகிய தாங்கள் வழியைத் தொடரும் சித்தர்களை ஏற்றம்-இறக்கம் பார்க்க,பிரிக்க என்னால் இயலாது.கொஞ்சம் பொறுமை காட்டுங்கள்...”

“எல்லாம் சரி அகத்தியா... 

அத்திரி மகரிஷி என்னிடம் வாக்குவாதம் செய்து போராடி,தன் சித்தத் தன்மையை இழக்க முன்வந்தார்.இல்லற வாழ்க்கையை மேற்கொண்டார்.அவர் வேண்டுகோளை மீறமுடியவில்லை.வாக்குகுறுதி கொடுத்தேன்.இதேபோல், இங்குள்ள எல்லாச் சித்தர்களும் என்முன் வந்து ஏதேனும் வரம் கேட்டால் என்பாடு என்ன ஆவது? அதனால்தான் நான் பயப்படுகிறேன்...” என்றார் அருணாச்சலேஸ்வரர்.

இதைக் கேட்டு கடகடவென்று சிரித்தாள் அருகில் இருந்த தேவி உண்ணாமுலையம்மன்.

“ஏன் சிரித்தாய்? – அருணாச்சலேஸ்வரர் கேட்டார்.

“சுவாமி ! உலகமெல்லாம் தங்களது சக்தியைக் கண்டு பயப்படுகிறது.எங்கே தங்களது முக்கண் திறக்கப்பட்டு விடுமோ என்று கதிகலங்கி நிற்கிறது.அப்படியிருக்க ...தாங்கள் இந்த சித்தர்களை கண்டு பயப்படுகிறேன் என்று சொன்னபோது எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.அதனால்தான் சிரித்துவிட்டேன்” என்றாள் தேவி.

“முக்கண்ணா தாங்கள் நினைப்பதுபோல் இங்குள்ள சித்தர்கள் யாரும் தங்களிடம் ஒரு போதும் வரம் கேட்டு தொந்தரவு செய்யமாட்டார்கள்.இதற்கு யாம் பொறுப்பேற்கிறோம்.ஆனால் ஒன்று..”என்று இழுத்தார் அகத்தியர்.

“என்ன?”

“ஒருவேளை,தங்கள் முன்பு இந்த சித்தர்கள் செய்யப்போகும் சித்து விளையாட்டைக் கண்டு தாங்களே ஆசைப்பட்டு வரம் கொடுத்துவிட்டால் அதற்க்கு அகத்தியன் பொறுப்பேற்க முடியாது.” என்று பவ்வியமாகச் சொன்னார் அகத்தியர்.

“அகத்தியரே ! நீங்கள் சொல்வதும் சரி.என்னையும் அறியாமல் அப்படிப்பட்ட தவறுகளைச் செய்திருக்கிறேன்.ம்ம்ம்...பார்ப்போம்..”

“அப்படியென்றால்,என்றைக்கு சித்தர்களை அங்கு வரச் சொல்வது?”

“அகத்தியரே ! இந்த வனம் ஏறத்தாழ நான்கு புறமும் நூறு காத தூரம் கொண்டது.வனத்தின் நடுவில் இருக்கும் மிருகங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.நந்தவனமும் கெடக்கூடாது.ஒன்று செய்..இங்குள்ள மலை உச்சிக்கு சென்று விடலாம்.இன்னும் சிலநாளில் கார்த்திகை நட்சத்திரம் வருகிறது.கார்த்திகை விழாவை முடித்து விட்டு ,11 நாட்கள் நானும்,உண்ணாமுலை அம்மனும் மலை உச்சிக்கு வருகிறோம்...”
அப்படியே ஆகட்டும் அய்யனே !” என்றார் அகத்தியர்.

அடுத்த நொடியே...

அருணாச்சலேஸ்வரரும்,உண்ணாமுலை அம்மனும் கருவறைக்குள் நுழைந்து மறைந்தனர்.

அதைத்தொடர்ந்து,தனக்கு பின்னால் நின்று கொண்டிருந்த சித்தர்களைப் பார்த்த அகத்தியர்,கார்த்திகை நட்சத்திரம் கழிந்த பிறகு அங்குள்ள மலை உச்சிக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.

“சிவபெருமான் முன்னிலையில் உங்களது சித்து வேலையைச் செய்து காட்டுங்கள்.இது போன்ற ஒரு அருமையான வாய்ப்பு கடந்த மூவாயிரம் ஆண்டுகாலமாக ஏற்பட்டதில்லை.அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.ஆனால் யாரும் நேரடியாக சென்று எந்த வரமும் கேட்கக்கூடாது.வெகுமதியும் கேட்கக்கூடாது....” என்றும் சித்தர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைக் கேட்ட மாத்திரத்தில் எல்லா சித்தர்களுக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி.கரகோஷம் எழுப்பினார்கள்.

தாங்கள் அற்புதம் நிகழ்த்தப்போகும் அந்த இனிய நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர்.

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் வந்தது.அகத்தியர் உட்பட அனைத்து சித்தர்களும்,மகரிஷிகளும்,முனிவர்களும்,தேவலோகத்து தேவர்களும் மற்றும் பிரம்மா,விஷ்ணுவும் அங்கு ஆவலோடு கூடியிருந்தனர்.

அன்றைய தினம் மாலைநேரம் –

கிழக்கு வானில் சந்திரன் தன் பூரண சந்தோஷ முகத்தோடு மெல்ல வெளியே வந்தான்.தெய்வீகத் தன்மை மலையில் மொத்தமாக கூடியிருந்தது.மந்திர கோஷங்கள் மெல்ல மெல்ல மலையைச் சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தன.

அப்போது அருணாச்சலேஸ்வரர் தன் தேவி உண்ணாமுலையம்மனோடு மலை உச்சிக்கு வந்தார்.எல்லா தேவர்களும் எழுந்து நின்று முக்கண்ணனையும்,தேவியையும் அன்போடும்,பக்தியோடும் வரவேற்று வெண்சங்கு ஊதினர்.மத்தளத்தை நந்திதேவர் வாசிக்க...யாழைக் கொண்டு நாரதர் மங்கள கானம்பாட...வானத்திலிருந்து தேவர்கள் மலர்மாலைகளைத் தூவ...திருவண்ணாமலை கோலாகலமாக ஒளிபெற்று காணப்பட்டது.

எல்லோரையும் வரவேற்ற அகத்தியர் ,சித்து வேலையை காண்பிக்க முதலில் மச்சமுனிவரை அழைத்தார்.

“இதோ வந்துவிட்டேன் ...”என்று மச்சமுனியின் குரல் கேட்டது.ஆனால் அவரைக் காணவில்லை.

‘எங்கே போனார் இந்த மச்சமுனி?’ என்று எல்லோரும் திகைத்து நிற்க ..சட்டென்று பூமியில் இருந்து நான்கு தீப்பிழம்பு தோன்றியது.
அந்த தீப்பிழம்பு நேராக வானத்தை நோக்கி வெகுவேகமாக சென்றது.அது சென்றவேகத்தைப் பார்த்தால் வானத்தையே சுட்டெரித்து விடும்போல் இருந்தது.

எல்லோரும் தங்கள் விழிகளையும் வானத்தை நோக்கி உயர்த்திக் கொண்டிருக்கும்போது அந்த தீப்பிழம்பு வெகுவேகமாக அண்ணாமலை நோக்கி திரும்பியது.

சில விநாடிக்குப் பின் அது மலர்மாலையாக மாறி,சிவபெருமான்-உண்ணாமுலையம்மன் கழுத்தில் வந்து விழுந்தது.

(சித்தர்கள் வருவார்கள்...)

ஞாயிறு, 2 மார்ச், 2014

தேடி வந்து மாலை சூட்டினாள் அனுசூயா-தொடர்ச்சி


"இப்பொழுது என்ன செய்ய வேண்டும் அகத்தியரே?"

"என்னுடைய தவ வலிமையைக் கொண்டு உன்னிடம் இருக்கும் சித்தத் தன்மையைக் காப்பாற்றி இருக்கிறேன்.உனக்கு வாக்குறுதியும் தந்து தவத்தைத் தடுத்து இருக்கிறேன்.இது அருணாசலேசுவரருக்குப் பிடிக்காமல்போகலாம்.நீ அனுசுயாவுடன் சதுரகிரி மலைக்கு இக்கணமே கிளம்பு.நான் இங்கிருந்து அருணாசலேஸ்வரரை சமாதானப்படுத்தி விட்டு,பின்பு உன்னை சதுரகிரியில் வந்து சந்திக்கிறேன்..."

"தங்களது சொல்லை ஏற்றுக் கிளம்புகிறேன்.அகத்தியரே! என்றாலும்,எனக்கு இதே திருவண்ணாமலையில் நிரந்தரமாகத் தங்க வேண்டும் என்று மட்டுமே ஆசை"

"முதலில் அருணாசலேஸ்வரரை சமாதானப்படுத்தி விட்டு வருகிறேன்.பிறகு இதே திருவண்ணாமலையில் நிரந்தரமாகத் தங்க அவரே அழைப்பார்" என்றார் அகத்தியர்.

அப்போது,தேவகன்னிகை போல் கையில் மலர் மாலையோடு வந்தாள் அனுசூயாதேவி.அகத்தியர் முன்பு விழுந்து வணங்கியவள்,அத்திரி மகரிஷி கழுத்தில் அந்த மாலையை அணிவித்தாள்.இருவரும் கணவன்-மனைவி ஆனார்கள்.

அத்திரி-அனுசூயா தம்பதியர் சென்ற பிறகு,மற்ற சித்தர்களை எல்லாம் அழைத்தார் அகத்தியர்.

"அத்திரி சித்தரை போல் நீங்களும் ஆசைப் பட்டு விடாதீர்கள்.இனிமேல் உங்கள் சித்தத் திறமைகளை இந்த திருவண்ணாமலையில் நீங்கள் செய்து  காட்ட வேண்டும்.உங்களை சித்தர்களாக மாற்றியதற்கு காரணமே இந்த பூலோக மக்களுக்குத் தொண்டு செய்யத்தான்,உங்கள் சுயநலத்த்திற்காக அல்ல!

அது மட்டுமல்ல,அருணாசலேஸ்வர்-உண்ணாமலை தேவிக்கு முன்பாக உங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் அபூர்வமான சித்தத் தன்மைகளை காட்டுகள்.நானும் இதுவரை உங்கள் அனைவரது சித்துக்களையும் தனித்தனியாக காண ஆசையாக இருக்கிறது..."என்று சொல்லிவிட்டு  அருணாசலேஸ்வரரை காணச் சென்றார் அகத்தியர்.

(சித்தர்கள் வருவார்கள்...)

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

தேடி வந்து மாலை சூட்டினாள் அனுசூயா-தொடர்ச்சி


"எதற்கு தாங்கள் சிரிக்கீறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?" 
என்று சற்று கோபத்தோடும்,சந்தேகத்தோடும் கேட்டார் அத்திரி சித்தர்.

"அத்திரி!உன்னை மகா புத்திசாலி,நாலும் தெரிந்தவன் என்று நினைத்து விட்டேன்.ஆனால்..."

"உனக்கு சிவபெருமான் வாக்கு கொடுத்தாரா?"

"ஆமாம்!நீ தவம் செய்.உனக்கு அனுசூயா என்ற பெண் துணைவியாக வருவாள் என்றார்.

"மனைவியை அடையாளம் காட்டிவிட்டார்.அவ்வளவுதானே ! ஆனால் உனக்கு "ஆண்" குழந்தைதான் வாரிசாக பிறக்கும் என்று எங்காவது சொல்லிஇருக்கிறாரா?ஒருவேளை,உனக்கு வாரிசு பாக்கியம் இல்லை என்றாலோ அல்லது பெண் வாரிசு பிறந்தாலோ என்ன செய்வாய்?இதை நீ கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா?இதை நினைத்துதான் நான் சிரித்தேன்" என்றார் அகத்தியர்

"ஆமாம்...இப்பொழுதுதான் எனக்கே புரிகிறது.என்னை சிவபெருமான் மிக நன்றாக ஏமாற்றிவிட்டார்" என்று மௌனமாக முணுமுணுத்தார் அத்திரி.

'சரி...சரி...போனது போகட்டும்.உன் விருப்பப்படி இன்னும் 3 நாழிகையில் அனுசூயா தேவி இங்கு உன்னைத் தேடி வருவாள்.அவளை அழைத்துக் கொண்டு நீ உடனடியாக சதுரகிரி செல்" என்று அடுத்ததாக சொன்னார் அகத்தியர்.

"எதற்கு?"

"இனிமேல் நீ இங்கிருந்தால் உனக்கு தவ வலிமை முன்பு போல் இல்லாமல் போய்விடும்.உன் சித்தத் தன்மை மிகவும் பிரசித்திப் பெற்றது.அது இந்த பூலோக மக்களுக்கு நன்கு பயன் பட வேண்டும்.இதற்கு அருமையான இடம் சதுரகிரிதான்.இன்னும் சில காலத்திற்கு அந்த மலைதான் உனக்கு ஏற்கிறது"

"அப்படியென்றால் இந்த திருவண்ணாமலையில் எனக்கு இடம் கிடையாதா?"

"ஏன் கிடையாது?ஆனால்,அக்னி சொரூபமாக விளங்கும் அருணாசலேஸ்வரருக்கு கோபம் வரலாம்".

"ஏன்"

"அவர் உன் மீது பரிவும்,பாசமும் கொண்டிருந்தார்.உன்னைக்கொண்டு இந்த திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வகையில் அதிசயங்களையும் செய்து காட்டி மக்களை வியக்க வைக்க ஆசைப்பட்டார்.ஆனால்,உன்னுடைய எண்ணமோ இப்போது வேறு விதமா திசை மாறிப் போயிற்றே..."

(சித்தர்கள் வருவார்கள்...)

வெள்ளி, 27 டிசம்பர், 2013

தேடி வந்து மாலை சூட்டினாள் அனுசூயா



ஆலமரத்தின் விழுதில் தலை கீழாகத் தொங்கி அத்திரி மகரிஷி தவம் செய்வதையும்,அந்த ஆலமர விழுது வெட்டப்பட்டு அந்தரத்தில் தொங்குவதையும் ,அத்திரி மகரிஷிக்கு கீழே ஹோம குண்டம் தீப்பிழம்பாக இருப்பதையும் கண்ட அகத்தியருக்கு திகைப்பு ஏற்பட்டது.

மிகச்சிறந்த தவசீலரான அத்திரி மகரிஷி இப்படி கடும் தவம் புரிவதற்கு என்ன காரணம் என்பதை தன் ஞானக் கண்ணால் கண்டார்.மிகச்சாதாரணமான எதிர்பார்ப்புக்காக அத்திரி மகரிஷி இப்படியொரு தண்டனை தேவைதானா?என்று எண்ணிய அகத்தியர்,தனது முழு பலத்தையும் பிரயோகித்து "அத்திரி சித்தரே ! தவத்தை கலையும்,உம் வேண்டுகோளை யாமே சிவ பெருமான் சார்பில் நிறைவேற்றுவோம்" என்று வாக்குறுதி கொடுத்தார்.

அதன்படி,அத்திரி சித்தர் தனது தவத்தைக் கலைத்தார்.

அவர் பூமியில் கால் பதித்த அடுத்த விநாடி,வெட்டப்பட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்த ஆலம் விழுது மீண்டும் மரத்தில் ஓட்டிக் கொண்டது.கொழுந்து விட்டு எரிந்து கொண்டுருந்த அக்னி சட்டென்று மறைந்தது.அந்த இடத்தில் நீருற்று ஒன்று   பீறீட்டு கிளம்பியது.அந்த நீருற்றீல் கங்கா தேவி காட்சி கொடுத்தாள்.

அத்திரி மகரிஷி தன் முன் நின்று கொண்டிருந்த அகத்தியரின் பொற்பாதத்தில் விழுந்து வணங்கினார்.

அவரை தடவிக் கொடுத்த அகத்தியர்,"இந்த புனிதமான திருவண்ணாமலையில் எத்தனையோ சித்தர்கள் இருக்கிறார்கள்.எதிர்காலத்தில் இன்னும் பல சித்தர்களும் வருவார்கள்.கைலாயத்தில் இருந்த சிவபெருமான் இங்கு அண்ணமலையானாக மாறி அன்னை உண்ணாமலை அம்பளோடு னந்தமாக,நிரந்தரமாக தங்கி இருக்கிறார்.அவரது அருள் எல்லோருக்கும் கிடைக்ப் போகிறது.இதற்கு நம் சித்தர்கள் அனைவரும் பக்க பலமாக இருக்க வேண்டும்.

அப்படியிருக்க,கேவலம் பெண்னாசைக்காக உன் அத்தனை தவச்சிந்தனைகளையும் இழந்து இப்படியொரு போர்க்கோலம் கொள்ளலாமா?நீ  பெண்னாசை பிடித்தவன் அல்ல என்பது எனக்கு தெரியும்.என்னை விட அருணாசலேஸ்வரருக்கு மிக மிக நன்றாக தெரியும்.பின்... எதற்கு இந்த நாடகம்?" என்று அத்திரி மகரிஷியை ஆதங்கத்தோடு கேட்டார். 

"சித்தர்களுக்கு எல்லாம் தலையாயச் சித்தரே ! தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை.இப்படியே சித்தானாக,மலையிலும்,சதுரகிரி மலையிலும்,தங்களது பொதிகை மலையிலும் நடமாடுவதை விட எனக்கென்று ஒரு வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.அந்த வாரிசை பன்மடங்கு என்னைவிட சித்தனாக்கி,அவனை ஒரு கடவுளாக ஆக்கி மாற்றிக்காட்டவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.இதற்கெல்லாம் ஒரு துணை வேண்டுமல்லவா?அதனால்தான் இந்த தவம் செய்தேன்" என்றார் அத்திரி.

இதைக்கேட்டு அகத்தியர் வாய்விட்டுச் சிரித்தார்.

(சித்தர்கள் வருவார்கள்...)

வியாழன், 12 டிசம்பர், 2013

அக்னிக்கு மேல் தலை கீழாக தவம் - தொடர்ச்சி



சிவனின் திருவிளையாடல்

இந்நிலையில் அத்திரி மகரிஷியின் தவத்தை கலைப்பதற்காகவோ அல்லது அவர் எப்பேர்பட்ட மகத்தான சக்தியை பெற்றிருக்கிறார் என்பதை ர்,உலகத்திற்கு காட்டவோ என்னவோ அருணாசலேஸ்வரர் ஒரு திருவிளையாடலை நடத்தினர்.

அதையொட்டி இரண்டு எமகிங்கரர்களை அத்திரி மகரிஷி தவம் செய்யும் ஆலமரத்திற்க்கு அனுப்பி,யாரும் கண்டு கொள்ளாத நேரத்தில் அத்திரிக்கு தெரியாமல் அந்த ஆலமரத்து விழுதுகளை வெட்டி விடச் சொன்னார்.

இப்படி செய்வதன் மூலம்,அத்திரி சித்தர் தன் தவ வலிமையை கொண்டு எப்படி அதை தடுத்துக் கொள்ள போகிறார் என்பதை அறியவும் அவர் ஆவலாக இருந்தார்.

இன்னொன்று....இப்படி பல தடைகளைப் போட்டால்தான் அத்திரி மிகவும் உறுதியாகவும்,ஆழமாகவும் தவத்தை மேற்கொள்வார் என்பது அவரது கருத்தாக இருந்தது.

தேவியின் கோபம்

அருணாசலேஸ்வரரது நாயகியான உண்ணாமலை அம்மனுக்கு,தன் கணவர் ஏன் இப்படி அத்திரி சித்தரை கொடுமை செய்கிறார்?அப்படியென்ன உலகத்தில் இல்லாத வரத்தை கேட்டார்?அவருக்கு ஒரு துணைவி வேண்டும் என்றுதானே கேட்டார்.கொடுத்துவிட வேண்டியதுதானே..? என்று வருத்தம் கலந்த கோபம் ஏற்பட்டது.

இதை அறிந்து கொண்ட அருணாசலேஸ்வரர்,"தேவி ! உன் மனதில் உள்ளதை யாம் அறிவோம்.எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்.அவர்கள் கேட்டதை உடனடியாகக் கொடுத்துவிட்டால் தவத்திற்க்கு மகிமை இருக்காது.சித்தர்களின் உச்சக்கட்டத்தை அடைந்த அத்திரி மகரிஷிக்கு எதற்காக இல்லறத்தில் நாட்டம் ஏற்பட்டது ? என்பது தெரியவில்லை.சித்தர்கள் எல்லாவற்றையும் தாண்டியவர்கள்,ஆசாபாசத்தை வென்றவர்கள்.அப்படிப்பட்ட தூய்மையை யாரும் கெடுக்கக் கூடாது.அதிலும் அத்திரி போன்றோர்களுக்கு இப்படிப் பட்ட ஆசை வரலாமா?" என்றார்.

"இதை நான் ஏற்க மாட்டேன் சுவாமி?"

"ஏன்?"

"சித்தர்களுக்கு எல்லாம் முதல் சித்தராகிய தாங்கள் என்னுடன் இல்லறம் நடத்துகிறீர்கள்.தாங்களே அதை செய்து விட்டு அத்திரி மகரிஷியைப் போய் "தவம்கிட" என்று விரட்டி அனுப்பலாமா சுவாமி?" என்றாள் உண்ணாமலை அம்பாள்.

"ஏதோ சொல்லப் போனால் என்னையே குற்றம் சாட்டுகிறாயே தேவி.அத்திரி மகரிஷி மட்டும் எனது சோதனையில் வெற்றி பெறட்டும்.அவருக்கும் அனுசூயா என்னும் தலை சிறந்த சித்தப் பெண்மணி மனைவியாக அமைவாள்.இது நடக்கத்தான் போகிறது".

"அப்படியென்றால் எனக்கு மகிழ்ச்சிதான்" என்று தன் கோபத்தை சற்று குறைத்துக் கொண்டாள் அண்ணாமலைக்கரசி அம்மன்.

இதற்கிடையில் - 

அருணாசலேஸ்வரர்   உத்தரவிற்க்கு இணங்க ஓர் அமாவாசை நேரத்தில் இரண்டு எமகிங்கரர்கள் மாறு உருவத்தில் அத்திரி மகரிஷி தவம் செய்யும் ஆலமரத்திற்க்கு வந்தனர்.நீண்ட வாளால் அத்திரி மகரிஷி தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்த விழுதை பலமாக வெட்டினர்.மரத்தில் இருந்து விடுபட்டது விழுது.

ஆனால் அந்த விழுது கீழே விழாமல் அப்படியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.அதன் வால் பக்கத்தில் அத்திரி சித்தரும் கீழே விழாது தொங்கிக் கொண்டிருந்தார்.இதைக் கண்டு வெலவெலத்துப் போனார்கள் அந்த இரண்டு எமகிங்கரர்களும்.

அப்போது,எதிர்பாராத விதமாக அங்கு வந்தார் அகத்தியர்.

(சித்தர்கள் வருவார்கள்...)
 

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

அக்னிக்கு மேல் தலைகீழாக தவம்




அத்திரி மகரிஷி திருவண்ணாமலையில் தவம் இருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டு வானத்து தேவர்களும்,பூமியில் உள்ள ரிஷிகளும்,
முனிவர்களும்,சித்தர்களும் திருவண்ணாமலையில் ஒன்று கூடினார்கள்.

தனக்கென்று ஒரு தனித் தகுதியை வளர்த்துக் கொண்டு அஷ்டமா சித்திகளையும் பெற்றவர்...

ஊருக்கெல்லாம் குண்டலினி சக்தியை சொல்லிக் கொடுத்தவர்...இன்று தெய்வங்களுக்கு நிகரானவர் என்று பாராட்டு பெற்றவர்...இவ்வளவு உயர்ந்த பீடத்திலிருந்து கடந்த 400 ஆண்டுகளாக காலமாக பொதுமக்களுக்கும் அருந்தொண்டாற்றி வருகிறவர்,எதற்காக தவம் செய்கிறார்? என்பது நிறைய பேருக்குப் புரியவில்லை.

ஆனால் - 

அத்திரி ரிஷியோ இதைப் பற்றிக் கவலைப்படவில்லை.ஆலமரத்தின் விழுதுகளில் தலை கீழாகத் தொங்கி தவம் செய்ய ஆரம்பித்தார்.

அவரது தலைக்கு கீழே அக்னி தேவனால் உண்டாக்கபட்ட ஹோம குண்டம் இருந்தது.அதில் இருந்து அக்னி வெளியே வந்து கொண்டுருந்தது.
பல்வேறு வாசனைத் திரவியங்கள்.140 மூலிகைகள்,202 பச்சை  மூலிகைகள்,அரசமித்து,தாமரைப் புஷ்பங்கள் எல்லாம் மூட்டை மூட்டையாக அந்த ஹோம குண்டத்தில் தானாக கொட்டிக் கொண்டிருந்தன.இந்த மூலிகைகளின் நறுமன வாசம் திருவண்ணாமலை முழுவதும் பரவி எல்லோரையும் சுண்டி இழுத்தது.

இதுதான் ரகசியம்...


கண்ணை மூடிக் கொண்டு ஆலமரத்து விழுதின் உதவியோடு,கீழே அக்னி குண்டத்திற்க்கு மேல் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தாலும் ,தன்னைக் காண வந்த பொது மக்களது மனக் குறைகளையும் ஞானக் கண்ணால் அறிந்தார் அத்திரி.

"சித்தர் பெருமானே ! கீழிருக்கும் அக்னியின் வேகத்தை அருகில் நிற்கும் எங்களாலேயே தாங்க முடியவில்லை.தாங்களோ அக்னி குண்டத்திற்க்கு நேராக தலை கீழாகத் தொங்கி தவம் செய்கிறீர்கள்..இது எப்படி பெருமானே?என்று,கை கூப்பி அத்திரி மகரிஷியைப் பார்த்து கேட்டார் ஒரு பக்தர்.

அந்த பக்தனது காதில் அத்திரி மகரிஷி ஒரு அதிசயத்தை சொன்னார்.

"என்னை அக்னி பகவான் சுட்டெரிக்க மாட்டான்.அவன் தண்ணீராக மாறி,ஒரு நீருற்றுப் போல் எனக்கு குளிர்ச்சியைத் தருகிறான்.ஏனென்றால் அவனது வேண்டுகோள் பலவற்றை நான் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறேன்..."

"அப்படியென்றால்,எங்களுக்கெல்லாம் இந்த வெப்பம் தாங்கமுடியவில்லையே...."

"அவ்வளவுதானே...இன்னும் 1/2 விநாடியில் இதே அக்னி உங்களுக்குத் தென்றலாக மாறி விடுவான்...பாரேன்" என்று அத்திரிச் சித்தர் சொன்ன மறு  விநாடியே,அந்த அக்னி குண்டத்தில் இருந்து அதுவரை வெப்பமாக வீசிக் கொண்டிருந்த அக்னி குளிர்ந்த காற்றாக வீசத் தொடங்கியது.

அத்திரி எவ்வளவு பெரியச் சித்தர் என்று திருவண்ணாமலையில் உள்ள அத்தனை பேரும் வியந்து போனார்கள்.

(சித்தர்கள் வருவார்கள்...)

சனி, 30 நவம்பர், 2013

மனிதனாக பிறக்க சித்தத் தன்மையை இழந்த மகரிஷி




சுற்றிப் பார்த்தால் பெருங்காடு.

கண்ணிற்க்கு எட்டிய தூரம் பசுமையான,அதே சமயம் பிரம்மாண்டமான மலைக்குன்று.மலைப் பெய்தாலும்,பெய்யா விட்டாலும் மலையின் நாலா பக்கங்களிலும் வெள்ளி வருக்கி கொட்டுவது பொல் அங்காங்க்கெ அருவிகள் கொட்டிக் கொண்டுருக்க..அந்த மலையில் உள்ள பறவைகள் எல்லாம் கூட்டம் கூட்டமாக தங்களூக்குள் எழுப்பிய கீச்சு கீச்சு சத்தம் நன்றாகவே எதிரொலித்தது.

மான்களும்,மயில்களும்,முயல்களும் ஆனந்த்தோடு அங்கும் இங்கும் சுதந்திரமாக நடாமாடிக் கொண்டுருந்தன.தங்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்ற சந்தோஷப் பெருமூச்சு அவைகளிடம் நன்றாகவே காணப்பட்டது.

தென்றல் காற்று அருவியில் லேசாக நனைந்துகொண்டு,அந்த காட்டில் ஆங்காங்கே பூத்திருந்த நறுமணப் புஷ்பங்களைத் தொட்டு சீண்டிவிட்டு, அந்த புஷ்பங்களுக்கும் தெரியாமல் அவற்றின் வாசனையை திருடியபடி அந்த காட்டில் தட்டாமாலை போல் சுற்றி சுற்றி வந்து கொண்டுருந்தது.

இந்த வர்ணனைகளுக்கு சொந்தக்கார இடம் தான் திருவண்ணாமலைக்காடு.

இந்த அருமையான காட்டில் ,புஷ்பத் தோட்டத்திற்க்கு நடுவில் அமைதியாக அருணாசலேஸ்வரர் ஆனந்தமாக தன் தேவியுடன் அமர்ந்து கொண்டுருந்தபோது.....

சித்தர்களின் முக்கியமானவரான அத்திரி மகரிஷி  அங்கு வந்தார்.

"என்ன வேண்டும் அத்திரியாரே?" - சிவபெருமான் கேட்டார்.

"தங்கள் தரிசனமும் அருளாசியும் வேண்டும்.கைலாயத்துக்குக் சென்று அங்கு தரிசனம் பெறலாம் என்று எண்ணினேன்.நந்திதேவர்தான் தாங்கள் இங்கு இருப்பதாக சொன்னார்.ஆகவே நேரடியாக இங்கு வந்து விட்டேன் தேவா !".

"மகிழ்ச்சி ! சித்தராகிய உனக்கு வேறு என்ன வேண்டும்?".

"சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீகளே....?".

"தாராளமாக சொல்லலாம்!"

"சித்தத் தன்மையோடு தங்கள் ஆசீர்வாதத்தால் நானூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்து கொண்டுருக்கிறேன்.ம்ம்...இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி தனிமையில் நான் உலா வருவது?.எனக்கென்று ஒரு துணைவி வேண்டும்.அவள் மூலம் எனக்கு வாரிசு வேண்டும்.இதைத்தான் தாங்கள் கருணை கூர்ந்து எனக்கு அருள வேண்டும்" என்றார் அத்திரி மகரிஷி.

"நியாயம்தான்.ஆனால்,சித்தர்களுக்கெல்லாம் முதல் சித்தரான தங்களே இங்கு உண்ணாமலை அம்மனோடு இல்லறவாழ்க்கை நடத்து கிறீர்கள்.
போதாக்குறைக்கு தங்களுக்கு வாரிசும் உண்டு.தங்களுக்கே இந்த பாக்கியம் கிடைத்திருக்கும்போது சாதாரண சித்தனான எனக்கும் ஆசைஇருக்காதா?" என்று பவ்யமாக வேண்டுகோள்  விடுத்தார் அத்திரி சித்தர்.

இந்த பதில் அருணாசலேஸ்வரருக்கு ஏற்புடையதாக இல்லை.இதை விட ,முக்கண்ணன் அருகில் இருந்த உண்ணாமலை தேவிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.வெறுப்புற்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"அத்திரி மகரிஷியே ! உனக்குள்ள தவ வலிமையின் பலம் என்ன தெரியுமா? நான் சொல்கிறேன்..கேள் ! மண்ணைப் பொன்னாக்கும் ரசவாத வித்தயை கற்றிருக்கிறீர்.நினைத்தால் வான் வீதியில் யார் கண்ணுக்கும் புலப்படாத வண்ணம் பூமியில் இருந்து வானுலகத்திற்க்கு பறந்து செல்லும் அற்புதம் உன்னிடம் இருக்கிறது.அப்படித்தானே.....?"

"ஆமாம் !"

"அப்புறம்... மனிதர்களை எந்த விச ஜந்து தீண்டினாலும் அவர்கள் உன்னிடம் வந்தால் மறுபடியும் உயிர் கொடுக்கும் அபாரமான ஆற்றல் இருக்கிறது...."

"நான் இவற்றை இல்லையென்று சொல்லவில்லயே...!"

"பிரம்மாவுக்குப் பிறகு மனிதர்களது உயிர் காக்கும் வித்தையைக் கற்றதால்,உன்னை இரண்டாவது பிரம்மா  என்று தேவலோகத்திலும்,மண்ணுலகிலும் போற்றிப் புகழ்கிறார்கள்.இது யாருக்கும் கிடைக்காத பாக்கியம் ஆயிற்றே...!"


இதைக்கேட்டு வியந்துபோன சிவபெருமான்,"அத்திரியாரே ! தாங்கள் ஒரு சித்தர் என்பதை மறந்து விட்டீர்கள் என எண்ணுகிறேன்.தங்களது சித்தத்தன்மை எப்பேர்பட்டது ! அதை விட்டு விட்டு,ஒரு சராசரி மானிடன் போல் இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளப் போவதாகச் சொல்கிறீர்களே?" என்றார் அமைதியாக.

"இவை எல்லாம் உண்மை... உண்மைதான் ! ஆனால்!,இதெல்லாம் தாங்கள் கொடுத்த பிச்சை தேவா ! "

"இருக்கலாம்...உன்னுடைய தவத்திற்கு கிடைத்த பரிசு இவை என்று ஏன் எண்ணக்கூடாது? அப்படியிருக்க... இத்தனை தகுதிகளையும் தூக்கி எறிந்து விட்டு இல்லற வாழ்க்கை மேற்கொள்ளப் போவதாகச் சொல்கிறாயே...!".

"இத்தனை தகுதிகளைவிட,இல்லற வாழ்க்கையில் ஒரு நல்ல கணவனாக ஒரு வாரிசுக்குத் தந்தையாக இருக்க வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக என் மனதில் வந்திருக்கிறது.இதை தாங்கள் இந்த திருவண்ணாமலை புண்ணிய பூமியில் வரமாகத் தந்தருள வேண்டும்" என்று மீண்டும் பிடிவாதமாக அத்திரி மகரிஷி தொடர்ந்தார்.

"யோசித்துத்துதான் சொல்கிறாயா?"

"ஆமாம் !"

"சரி...உன் தலைவிதியை மாற்ற யாரால் முடியும்? நீ 
விரும்புகிறபடியே இல்லற வாழ்க்கை அமையும்.ஆனால்,நீ இதனால் அனைத்து சித்தத் தன்மைகளையும் இழப்பாய்.சரியா?"

"சந்தோஷமாக இழக்கிறேன்"

"அப்படியானால் இந்த திருவண்ணாமலையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள பாதையில் அமர்ந்து பிரம்மாவை நோக்கி தவம் செய்.தண்ணீர் கூட குடிக்கக் கூடாது.கண்ணை மூடித் தவம் செய்.உன் தவத்தின் பயனாக உனக்கு 'அனுசூயா' என்னும் இளம்பெண் மனைவியாவாள்".

"வாரிசு பிறக்குமா தேவா?"

"அதைப்பற்றி இப்பொழுது சொல்ல முடியாது.அது,உன் பாடு.அது மட்டுமல்ல.நீ இப்போது சித்தத் தன்மையை இழந்து விடுகிறாயோ..அப்போது முதல் சாதாரணமாக குடிமகனாக மாறிவிடுவாய்.அதன்பிறகு என்னிடம் இப்படி நேரில் பேச இயலாது.தவம் செய்து மறுபடியும் சித்தநிலை அடைந்த பிறகே என்னிடம் பேசலாம்" என்றார்,அருணசலேஸ்வரரான சிவபெருமான்.

அடுத்த விநாடியே அத்திரி மகரிஷியான சித்தர்  அத்திரிநாதனாக சாதாரண குடிமகனாக மாறினார்.சிவபெருமான் சொன்னபடியே திருவண்ணாமலை மீதுள்ள குகையில் அமர்ந்து தவம் செய்யலானார்.

(சித்தர்கள் வருவார்கள்...)

திங்கள், 18 நவம்பர், 2013

சித்தர்கள் வாழும் மலை




கைலாயத்திற்க்குச் சென்றால்தான் சிவ பெருமானை தரிசிக்க முடியும் என்று முன்னொரு காலத்தில் சொல்லப் படுவது உண்டு.
கைலாயத்திற்க்குச் செல்லாமலே தமிழ்நாட்டில் சிவ பெருமானை காண முடியும் என்று விதியை மாற்றிய பெருமை திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உண்டு.

'தென்னாடுடைய சிவனே போற்றி' என்று தான் சிவபெருமானை அடியவர்கள் எல்லோரும் பாடி அகம் மகிழ்ந்திருக்கிறார்கள்.சிவபெருமானே விரும்பி அமர்ந்த இடம் தமிழ்நாட்டில் இரண்டு உண்டு.ஒன்று...சதுரகிரி மலை.இன்னொன்று திருவண்ணாமலை.

இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பார்கள்.சித்தர்களுக்கு எல்லாம் தலயாயச் சித்தர் முதல் சித்தர் சிவபெருமான்தான்.தலைவர் இருக்கும் இடத்தில்தானே தொண்டர்களும் குடியிருப்பார்கள்?

அதனால் திருவண்ணாமலையில் சிவா பெருமானுக்கு உறுதுணையாக,காலம் காலமாக நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும்,அவர்களுக்கு பக்கபலமாக 178  சித்தர்களும் இன்றைக்கும் அரூபமாக நடமாடி மாடிக் கொண்டுருக்கிறார்கள்.கைலாய மலையில் கூட காண கிடைக்காத அதிசயம் இது.

மலை மேல் சிவ பெருமான் அமர்ந்திருந்தாலும் அவரது எண்ணம் எல்லாம் பூலோக மக்களின் நலன் மீது தான் இருந்தது.அதற்கு அடையாளம்தான் திருவண்ணாமலையில் குடிகொண்டு இருக்கும்
அருணாச்சலேஸ்வரர் கோவில்.

அத்தகைய புண்ணிய மலையை நமது தமிழகம் பெற்றிருக்கிறது என்றால்,இதை விட வேறு பாக்கியம் நமக்கு என்ன வேண்டும்?

            ஆனால் -

நிறைய பேருக்கு திருவண்ணாமலை பற்றிய முழு வரலாறு தெரியவில்லை.அங்கு நமக்காக உதவிகளை செய்யும் சித்தர்களைப் பற்றியும் சரியாக தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.

'சதுரகிரி'யைப் பற்றி சொல்லும் பொழுது,எவ்வளவு பெருமைப்படுகிறோமோ,அதை விட பன்மடங்கு பெருமை கொள்ளும் அளவுக்கு திருவண்ணாமலையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உண்டு.

அந்த அழகிய-அற்புதமான திருவண்ணாமலை வரலாற்றையும்,இதுவரை வெளியே வராத பல்வேறு அற்புத தகவல்களையும் அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் எடுத்துரைத்ததை நாம் இந்த புதிய தொடரில் பார்க்க இருக்கிறோம்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால்,மொத்தம் 205 சித்தர்கள் திருவண்ணாமலையில் இருக்கிறார்கள்.இதை விட்டால் சதுரகிரிக்கு அடிக்கடிசென்று வருவார்கள்.

அந்த சித்தர்கள் யார்-யார்?

அத்திரி மகரிஷி,மச்ச முனிவர்,கோரக்கர்,கிராம தேவர்,துர்வாசர்,சட்டை முனிவர்,அகத்தியர்,போகர்,புசுண்டர்,உரோமா மச்சித்தர்,யூகி முனிவர்,சுந்தரானந்தர்,அழகனந்தா,பிரம்ம முனி,காலங்கி நாதர்,நந்தி தேவர்,தன்வந்திரி,குரு ராஜரிஷி,கொங்கனர்,உதயகிரிச் சித்தர்,பிகுஞ்சக ரிஷி ,மேக சஞசார ரிஷி,தத்துவ ஞான சித்தர்,காளமீகா ரிஷி,விடன முனிவர்,யாகோபு முனிவர்,அமுத மகாரிஷி,சூதமா முனிவர்,சிவத்தியான முனிவர்,பூபால முனிவர்,முத்து வீரமா ரிஷி,ஜெயமுனி,சிறு வீரமா முனி,வேதமுனி,சங்கமுனி, காசிபமுனி,பதஞ்சலி முனி, வியாகிரம மகாரிஷி,ஜனகமா முனி,சிவப்பிரம்ம முனி,பராச முனி,வல்ல சித்தர்,அஸ்வணி தேவர், குதம்பைச் சித்தர்,புண்ணாக்கு சித்தர்,யோகச்சித்தர், கஞ்மலைச் சித்தர்,திருமூலநாதர்,மவுனச்சித்தர்,தேகசித்திக் சித்தர்,வரரிஷி, கவு பாலச்சித்தர்,மதிராஜ ரிஷி,கவுதமர்,தேரையர்,விசுவனித் தேவர், அம்பிக்கானந்தர், டமாரானந்தர்,கையாட்டிச்சித்தர், கண்ணானந்த சித்தானந்தர்,சச்சிதானந்தர்,கணநாதர்,சிவானந்தர்,சூரியானந்தர்,சோகுபானந்தர்,தட்சிணா மூர்த்தி,ரமநாதர் மதிசீல மகாமுனி,பெரு அகத்தியன்,கம்பளி நாதர்,புலஸ்தியர்,திரி காலாக்கயான முனி,அருட் சித்தர்,கவுன குளிகை ச்சித்தர்,ராஜரிஷி வசந்தமாமுனி,போதமுனி,காங்கேய ரிஷி,கான்சன முனி,நீயான சமாதிச்சித்தர்,சாந்த மஹா ரிஷி,வாசியோகச்சித்தர்,வாத சாந்த மகாரிஷி,காலாட்டிச்சித்தர்,சத்தரிஷி,தேவ மகாரிஷி,பற்ப மகாரிஷி, நவநாத ச்சித்தர்,அடவிச்சித்தர்,நாதந்தச்சித்தர், 
ஜோதிரிஷி,பிரம்மானந்த ரிஷி,அநுமாதிச்சித்தர்,ஜெகராஜ ரிஷி,நாமுனிச்சித்தர்,வாசுதேவ மகாரிஷி,பாலை யானந்தர்,தொழுகன்னிச்சித்தர்........

இந்த சித்தர்களைப்பற்றி - அவர்கள் செய்து வரும் விந்தைமிகு செயல்களைப் பற்றி,ஆன்மீகத்திற்காகவும்,மருத்துத்திற்காகவும் ஆற்றி வரும் தொண்டுப்பற்றி முதலில் பார்ப்போம்.

இது தவிர இன்னும் பாக்கி இருக்கும் 150 மகாசித்தர்கள் பற்றியும் இவர்களால் மனித குலத்திற்க்கு ஏற்படும் ஆதாயங்களைப் பற்றியும்,
இன்றைக்கும் திருவண்ணாமலையில் இவர்கள் எந்த உருவத்தில் உலா வருகிறார்கள்?.இவர்களை எந்த நிலையில் தரிசித்தால் அவர்களுடைய கருணை பார்வை நமக்குக் கிடைக்கும்? என்பதைப் பற்றி அகத்தியர் தனது ஜீவ நாடியில் எடுத்துரைத்திருக்கிறார்.

நாம் வாழ்ந்ததின் பலன்  நமக்குக் கிடைக்க வேண்டும்,நமது கஷ்டங்கள் விலக வேண்டும்.நினைத்ததை அடைய வேண்டும் பிரார்த்தனைகள் செய்ய முடியாதவர்களுக்கும் நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அகத்தியர் அருளால் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

அதற்க்கு முன்பு,நாம் அனைவரும் இந்த கார்த்திகை மாதத்தில் முதலாவதாக திருவண்ணாமலை ஈஸ்வரனை ஒரே ஒரு தடவை கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்வோம்.அவனருள் நிச்சயமாக எல்லோருக்கும் கிடைக்கும்.

(சித்தர்கள் வருவார்கள்...)