ஞாயிறு, 26 ஜனவரி, 2014

தேடி வந்து மாலை சூட்டினாள் அனுசூயா-தொடர்ச்சி


"எதற்கு தாங்கள் சிரிக்கீறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?" 
என்று சற்று கோபத்தோடும்,சந்தேகத்தோடும் கேட்டார் அத்திரி சித்தர்.

"அத்திரி!உன்னை மகா புத்திசாலி,நாலும் தெரிந்தவன் என்று நினைத்து விட்டேன்.ஆனால்..."

"உனக்கு சிவபெருமான் வாக்கு கொடுத்தாரா?"

"ஆமாம்!நீ தவம் செய்.உனக்கு அனுசூயா என்ற பெண் துணைவியாக வருவாள் என்றார்.

"மனைவியை அடையாளம் காட்டிவிட்டார்.அவ்வளவுதானே ! ஆனால் உனக்கு "ஆண்" குழந்தைதான் வாரிசாக பிறக்கும் என்று எங்காவது சொல்லிஇருக்கிறாரா?ஒருவேளை,உனக்கு வாரிசு பாக்கியம் இல்லை என்றாலோ அல்லது பெண் வாரிசு பிறந்தாலோ என்ன செய்வாய்?இதை நீ கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா?இதை நினைத்துதான் நான் சிரித்தேன்" என்றார் அகத்தியர்

"ஆமாம்...இப்பொழுதுதான் எனக்கே புரிகிறது.என்னை சிவபெருமான் மிக நன்றாக ஏமாற்றிவிட்டார்" என்று மௌனமாக முணுமுணுத்தார் அத்திரி.

'சரி...சரி...போனது போகட்டும்.உன் விருப்பப்படி இன்னும் 3 நாழிகையில் அனுசூயா தேவி இங்கு உன்னைத் தேடி வருவாள்.அவளை அழைத்துக் கொண்டு நீ உடனடியாக சதுரகிரி செல்" என்று அடுத்ததாக சொன்னார் அகத்தியர்.

"எதற்கு?"

"இனிமேல் நீ இங்கிருந்தால் உனக்கு தவ வலிமை முன்பு போல் இல்லாமல் போய்விடும்.உன் சித்தத் தன்மை மிகவும் பிரசித்திப் பெற்றது.அது இந்த பூலோக மக்களுக்கு நன்கு பயன் பட வேண்டும்.இதற்கு அருமையான இடம் சதுரகிரிதான்.இன்னும் சில காலத்திற்கு அந்த மலைதான் உனக்கு ஏற்கிறது"

"அப்படியென்றால் இந்த திருவண்ணாமலையில் எனக்கு இடம் கிடையாதா?"

"ஏன் கிடையாது?ஆனால்,அக்னி சொரூபமாக விளங்கும் அருணாசலேஸ்வரருக்கு கோபம் வரலாம்".

"ஏன்"

"அவர் உன் மீது பரிவும்,பாசமும் கொண்டிருந்தார்.உன்னைக்கொண்டு இந்த திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வகையில் அதிசயங்களையும் செய்து காட்டி மக்களை வியக்க வைக்க ஆசைப்பட்டார்.ஆனால்,உன்னுடைய எண்ணமோ இப்போது வேறு விதமா திசை மாறிப் போயிற்றே..."

(சித்தர்கள் வருவார்கள்...)