ஞாயிறு, 2 மார்ச், 2014

தேடி வந்து மாலை சூட்டினாள் அனுசூயா-தொடர்ச்சி


"இப்பொழுது என்ன செய்ய வேண்டும் அகத்தியரே?"

"என்னுடைய தவ வலிமையைக் கொண்டு உன்னிடம் இருக்கும் சித்தத் தன்மையைக் காப்பாற்றி இருக்கிறேன்.உனக்கு வாக்குறுதியும் தந்து தவத்தைத் தடுத்து இருக்கிறேன்.இது அருணாசலேசுவரருக்குப் பிடிக்காமல்போகலாம்.நீ அனுசுயாவுடன் சதுரகிரி மலைக்கு இக்கணமே கிளம்பு.நான் இங்கிருந்து அருணாசலேஸ்வரரை சமாதானப்படுத்தி விட்டு,பின்பு உன்னை சதுரகிரியில் வந்து சந்திக்கிறேன்..."

"தங்களது சொல்லை ஏற்றுக் கிளம்புகிறேன்.அகத்தியரே! என்றாலும்,எனக்கு இதே திருவண்ணாமலையில் நிரந்தரமாகத் தங்க வேண்டும் என்று மட்டுமே ஆசை"

"முதலில் அருணாசலேஸ்வரரை சமாதானப்படுத்தி விட்டு வருகிறேன்.பிறகு இதே திருவண்ணாமலையில் நிரந்தரமாகத் தங்க அவரே அழைப்பார்" என்றார் அகத்தியர்.

அப்போது,தேவகன்னிகை போல் கையில் மலர் மாலையோடு வந்தாள் அனுசூயாதேவி.அகத்தியர் முன்பு விழுந்து வணங்கியவள்,அத்திரி மகரிஷி கழுத்தில் அந்த மாலையை அணிவித்தாள்.இருவரும் கணவன்-மனைவி ஆனார்கள்.

அத்திரி-அனுசூயா தம்பதியர் சென்ற பிறகு,மற்ற சித்தர்களை எல்லாம் அழைத்தார் அகத்தியர்.

"அத்திரி சித்தரை போல் நீங்களும் ஆசைப் பட்டு விடாதீர்கள்.இனிமேல் உங்கள் சித்தத் திறமைகளை இந்த திருவண்ணாமலையில் நீங்கள் செய்து  காட்ட வேண்டும்.உங்களை சித்தர்களாக மாற்றியதற்கு காரணமே இந்த பூலோக மக்களுக்குத் தொண்டு செய்யத்தான்,உங்கள் சுயநலத்த்திற்காக அல்ல!

அது மட்டுமல்ல,அருணாசலேஸ்வர்-உண்ணாமலை தேவிக்கு முன்பாக உங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் அபூர்வமான சித்தத் தன்மைகளை காட்டுகள்.நானும் இதுவரை உங்கள் அனைவரது சித்துக்களையும் தனித்தனியாக காண ஆசையாக இருக்கிறது..."என்று சொல்லிவிட்டு  அருணாசலேஸ்வரரை காணச் சென்றார் அகத்தியர்.

(சித்தர்கள் வருவார்கள்...)