வியாழன், 12 டிசம்பர், 2013

அக்னிக்கு மேல் தலை கீழாக தவம் - தொடர்ச்சி



சிவனின் திருவிளையாடல்

இந்நிலையில் அத்திரி மகரிஷியின் தவத்தை கலைப்பதற்காகவோ அல்லது அவர் எப்பேர்பட்ட மகத்தான சக்தியை பெற்றிருக்கிறார் என்பதை ர்,உலகத்திற்கு காட்டவோ என்னவோ அருணாசலேஸ்வரர் ஒரு திருவிளையாடலை நடத்தினர்.

அதையொட்டி இரண்டு எமகிங்கரர்களை அத்திரி மகரிஷி தவம் செய்யும் ஆலமரத்திற்க்கு அனுப்பி,யாரும் கண்டு கொள்ளாத நேரத்தில் அத்திரிக்கு தெரியாமல் அந்த ஆலமரத்து விழுதுகளை வெட்டி விடச் சொன்னார்.

இப்படி செய்வதன் மூலம்,அத்திரி சித்தர் தன் தவ வலிமையை கொண்டு எப்படி அதை தடுத்துக் கொள்ள போகிறார் என்பதை அறியவும் அவர் ஆவலாக இருந்தார்.

இன்னொன்று....இப்படி பல தடைகளைப் போட்டால்தான் அத்திரி மிகவும் உறுதியாகவும்,ஆழமாகவும் தவத்தை மேற்கொள்வார் என்பது அவரது கருத்தாக இருந்தது.

தேவியின் கோபம்

அருணாசலேஸ்வரரது நாயகியான உண்ணாமலை அம்மனுக்கு,தன் கணவர் ஏன் இப்படி அத்திரி சித்தரை கொடுமை செய்கிறார்?அப்படியென்ன உலகத்தில் இல்லாத வரத்தை கேட்டார்?அவருக்கு ஒரு துணைவி வேண்டும் என்றுதானே கேட்டார்.கொடுத்துவிட வேண்டியதுதானே..? என்று வருத்தம் கலந்த கோபம் ஏற்பட்டது.

இதை அறிந்து கொண்ட அருணாசலேஸ்வரர்,"தேவி ! உன் மனதில் உள்ளதை யாம் அறிவோம்.எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்.அவர்கள் கேட்டதை உடனடியாகக் கொடுத்துவிட்டால் தவத்திற்க்கு மகிமை இருக்காது.சித்தர்களின் உச்சக்கட்டத்தை அடைந்த அத்திரி மகரிஷிக்கு எதற்காக இல்லறத்தில் நாட்டம் ஏற்பட்டது ? என்பது தெரியவில்லை.சித்தர்கள் எல்லாவற்றையும் தாண்டியவர்கள்,ஆசாபாசத்தை வென்றவர்கள்.அப்படிப்பட்ட தூய்மையை யாரும் கெடுக்கக் கூடாது.அதிலும் அத்திரி போன்றோர்களுக்கு இப்படிப் பட்ட ஆசை வரலாமா?" என்றார்.

"இதை நான் ஏற்க மாட்டேன் சுவாமி?"

"ஏன்?"

"சித்தர்களுக்கு எல்லாம் முதல் சித்தராகிய தாங்கள் என்னுடன் இல்லறம் நடத்துகிறீர்கள்.தாங்களே அதை செய்து விட்டு அத்திரி மகரிஷியைப் போய் "தவம்கிட" என்று விரட்டி அனுப்பலாமா சுவாமி?" என்றாள் உண்ணாமலை அம்பாள்.

"ஏதோ சொல்லப் போனால் என்னையே குற்றம் சாட்டுகிறாயே தேவி.அத்திரி மகரிஷி மட்டும் எனது சோதனையில் வெற்றி பெறட்டும்.அவருக்கும் அனுசூயா என்னும் தலை சிறந்த சித்தப் பெண்மணி மனைவியாக அமைவாள்.இது நடக்கத்தான் போகிறது".

"அப்படியென்றால் எனக்கு மகிழ்ச்சிதான்" என்று தன் கோபத்தை சற்று குறைத்துக் கொண்டாள் அண்ணாமலைக்கரசி அம்மன்.

இதற்கிடையில் - 

அருணாசலேஸ்வரர்   உத்தரவிற்க்கு இணங்க ஓர் அமாவாசை நேரத்தில் இரண்டு எமகிங்கரர்கள் மாறு உருவத்தில் அத்திரி மகரிஷி தவம் செய்யும் ஆலமரத்திற்க்கு வந்தனர்.நீண்ட வாளால் அத்திரி மகரிஷி தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்த விழுதை பலமாக வெட்டினர்.மரத்தில் இருந்து விடுபட்டது விழுது.

ஆனால் அந்த விழுது கீழே விழாமல் அப்படியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.அதன் வால் பக்கத்தில் அத்திரி சித்தரும் கீழே விழாது தொங்கிக் கொண்டிருந்தார்.இதைக் கண்டு வெலவெலத்துப் போனார்கள் அந்த இரண்டு எமகிங்கரர்களும்.

அப்போது,எதிர்பாராத விதமாக அங்கு வந்தார் அகத்தியர்.

(சித்தர்கள் வருவார்கள்...)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக